
தேர்தல் பணிகள் நடந்து முடிந்த நிலையில் எத்தனையோ ஊர்கள் இருக்க முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுக்க விரும்புவது ஏன்? அவரது விருப்பத்திற்கு பின்னர் இத்தனை வெற்றி சென்டிமென்ட்டா? அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசியலில் தேர்தல் களப்பணி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு தேர்தல் முடிந்த பிறகு தலைவர்கள் மேற்கொள்ளும் பயணங்களும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதுண்டு.
அந்த வகையில், 2026 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது “ராசியான” இடமான கொடைக்கானலுக்கு சென்று உள்ளார்
அரசியல் தலைவர்களுக்கு ஒவ்வொரு ஊர் அல்லது பொருட்கள் மீது ஒரு தனிப்பட்ட நம்பிக்கை (Sentiment) இருப்பது வழக்கம். முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை கொடைக்கானல் பாம்பர்புரம் பகுதியில் உள்ள அந்த தனியார் நட்சத்திர விடுதி “வெற்றியின் நுழைவாயிலாக” பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ் நாட்டில்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முக ஸ்டாலின் இங்கு தங்கினார்; திமுக கூட்டணி 38 இடங்களில் வென்று சாதனை படைத்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டு கால வனவாசத்தை முடித்து திமுக ஆட்சியைப் பிடித்தது; ஸ்டாலின் முதல்வரானார். அப்போதும் இந்த விடுதி ராசியாக அமைந்தது.
2024 மக்களவைத் தேர்தல்: 40-க்கு 40 என்ற வரலாற்று வெற்றியைப் பெற்றபோது, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய ஸ்டாலின் தங்குமிடம் இதுவே.
தற்போதைய 2026 தேர்தலில் மீண்டும் அதே விடுதி, அதே அறை என “வெற்றி பார்முலாவை” ஸ்டாலின் கடைபிடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தற்போது சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை தங்கி, தேர்தல் கால உடல் சோர்வை நீக்கி, மன ரீதியாகப் புத்துணர்ச்சி பெற்று வருகிறார் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஓய்வெடுக்கும் அதே வேளையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் கொடைக்கானலில் உள்ள சக்தி வாய்ந்த தெய்வங்களை வழிபட்டு வருகின்றார்.
அதில் ஒரு பகுதியாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான தலத்தில் வழிபாடு செய்வது குடும்பத்திற்கும், பதவிக்கும் மேன்மை தரும் என்பது நம்பிக்கை.
கொடைக்கானல் குளிர் காற்று முக ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை ‘வெற்றிச் செய்தியை’ கொண்டு வருமா என்பதை மே மாதம் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் தெரிந்து கொள்ளலாம்.


