
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய ஆதார் அட்டைகளை வெளியிட தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய ஆதார் அட்டைகளை வெளியிட அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் புதிய ஆதார் அட்டைகள் ஆனது வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகும்
புதிய ஆதார் அட்டையின் அறிமுகம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வளவுபடுத்துவதே ஆதார் அட்டைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது
இந்தியாவில் ஆதார் வழங்கும் UIDAI அமைப்பு புதிய ஆதார் அட்டைகளில் குறைந்த அளவிலான தகவல்களையே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஆதார் அட்டைகளில் இருந்தது போல, பெயர், ஆதார் எண், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தனிநபர்களின் விவரங்கள் புதிய ஆதார் அட்டைகளில் காட்டப்படாது.
புதிய ஆதார் அட்டையில், குடிமகனின் புகைப்படம் மட்டுமே தெரியும். தற்போதுள்ள அனைத்து ஆதார் அட்டைகளிலும் இந்த அம்சம் ஒரே மாதிரியாக உள்ளது. புதிய ஆதார் அட்டையில் – உங்களின் அனைத்து முக்கிய தரவுகளையும் மறைக்கும் க்யூஆர் குறியீடுதான் இதில் உள்ள மிகவும் மேம்பட்ட அம்சமாக இருக்கும்.
இந்த க்யூஆர் குறியீட்டில் உங்கள் பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி, பாலினம் போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு தரவுகள் அனைத்தும் இருக்கும். அதாவது புதிய ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரமும் மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் இருக்கும்.
எளிதில் அச்சிடக்கூடிய இந்த தகவல்கள் புதிய ஆதார் அட்டைகளில் கிடைக்காது என்பதால், ஹோட்டல்கள், அலுவலகங்கள் போன்ற பல நிறுவனங்களால் நகல் எடுத்து உங்கள் தரவுகளை கண்காணிக்க முடியாது. மாறாக அதில் உள்ள க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கேனர்கள், யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ ஆப்கள் மற்றும் சரிபார்ப்பு கருவிகள் உங்கள் விவரங்களை ஸ்கேன் செய்ய முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது


