
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவடைந்துள்ள நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஜாதி ரீதியான வாக்குப்பகிர்வு குறித்த தரவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை கோடிட்டுக் காட்டுகின்றன.
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சாதி வாரியாக பார்க்கும் போது
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள பட்டியல் சமூகத்தினர் (SC), பாரம்பரியமாக திமுக கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடும்போது, திமுக கூட்டணி இந்தச் சமூகத்தில் 11 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. அதே சமயம், அதிமுக கூட்டணி இந்தச் சமூகத்திடம் 33 சதவீத வாக்குகளைப் பறிகொடுத்து மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்த இரண்டு பெரிய கட்சிகளின் இழப்பும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) மிகப்பெரிய லாபமாக மாறியுள்ளது. முதல் தேர்தலிலேயே 42 சதவீத எஸ்சி வாக்குகளைப் பெற்று, அந்தச் சமூகத்தின் முதன்மை விருப்பமாக TVK உருவெடுத்துள்ளது.
அதேபோல், 1 சதவீத மக்கள் தொகை கொண்ட பழங்குடியின (ST) மக்களிடமும் TVK 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி இங்கு 9 சதவீதத்தையும், அதிமுக கூட்டணி 31 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளன. இது விளிம்புநிலை மக்கள் மாற்றத்தை விரும்புவதைக் காட்டுகிறது.
தமிழக அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (OBC/MBC) சமூகத்தினர் 28% பேர், இந்த முறை தங்கள் ஆதரவை சிதற விட்டுள்ளனர். இங்கு திமுக கூட்டணி 12 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணி 21 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, தமிழக வெற்றிக் கழகம் 36 சதவீத வாக்குகளைப் பெற்று இந்தச் சமூகத்திலும் முன்னிலை பெற்றுள்ளது
இவை அனைத்தும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது


