
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரமும் ஃபேன் இயக்கப்படுகிறது. அதே போல ஏசி பயன்படுத்தப்படும் வீடு, அலுவலகங்களில் எல்லாம் பெரும்பாலான நேரம் ஏசி இயக்கப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த வெயில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து வீடுகளுக்கும் அடுத்த மாதம் கரண்ட் பில் எகிற போகிறது. இருந்தாலும் வெயிலை சமாளிக்க வேறு வழியில்லை. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின் துறை கோடை காலத்தில் டிமாண்ட் அதிகரித்து தென் இந்திய மாநிலங்களில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு மின் தேவை எவ்வளவு என்ற விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த (2025) ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டு இந்த மின் தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69 ஆயிரத்து 934 மெகாவாட்டில் இருந்து 73 ஆயிரத்து 805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19 ஆயிரத்து 679 மெகாவாட்டில் இருந்து 19 ஆயிரத்து 822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அதாவது, தென் மாநிலங்களிலேயே மின் தேவையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழத்தின் மின் தேவை தினமும் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 21-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம் தொட்டு 21 ஆயிரத்து 60 மெகாவாட்டாக இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதம் (மே) முதல் மாலையில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, தமிழக மின் வாரியத்தை மத்திய மின்துறை எச்சரித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கோடையில் மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக்குறையை சமாளிக்க, மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


