சாதாரண எறும்புகள் தானே என நினைப்போம்.ஆனால் அவற்றை வைத்து சர்வதேச அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம்.எறும்புகள் சர்வதேச பல்லுயிர் ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில் கென்யாவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட ராணி எறும்புகளை கடத்த முயன்றதாக 27 வயதான சீன நாட்டு நபரான Zhang Kequn என்பவருக்கு நைரோபி நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
கென்யாவில் அரிய வகை எறும்புகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் விவகாரம் தற்போது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஒரு குறிப்பிட்ட வகை எறும்புகள் சர்வதேச சந்தையில் சுமார் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எறும்புகள் பெரும்பாலும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரகசியமாக அனுப்பப்படுகின்றன.
குறிப்பாக, ‘ராணி எறும்புகள்’ மட்டும் அடையாளம் காணப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவை மருந்துத் தயாரிப்பு, அலங்காரப் பொருட்கள் மற்றும் சில நாடுகளில் வினோதமான உணவாகப் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கள்ளச்சந்தை தொழில் மிகவேகமாக விரிவடைந்து வருகிறது.
இந்தக் கடத்தல் தொழிலால் கென்யாவின் பல்லுயிர் சூழல் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எறும்புகள் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், பேராசை காரணமாக இவை வேட்டையாடப்படுவது காடுகளின் அழிவிற்கு வழிவகுக்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் கென்ய அரசு இந்தக் கடத்தலைத் தடுக்கப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் ரகசிய இணையதளங்கள் வழியாக நடக்கும் இந்த ‘கருப்பு வணிகம்’ அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.


