
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனது தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளைத் தாண்டுவதற்காகவும் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
நேற்று திருச்செந்தூரில் விஜய் மேற்கொண்ட சத்ரு சம்ஹார பூஜை என்பது எதிர்ப்புகளை முறியடிப்பதற்கான ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் என அதிகார மையத்தில் இருந்த பலர் இந்தப் பூஜையை மேற்கொண்ட வரலாற்றை ஒப்பிட்டு நேற்று செய்திகள் வெளியாகின. அந்த வரிசையில், ஷீரடியில் விஜய் மேற்கொள்ளும் வழிபாடு பொறுமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ஷீரடி வருகையை முன்னிட்டு, அங்குள்ள சாய்பாபா கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவர் பொது தரிசன வரிசையில் செல்வாரா அல்லது சிறப்பு தரிசனம் மேற்கொள்வாரா என்பது குறித்த விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவரது வருகையை அறிந்து மகாராஷ்டிராவில் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அங்குக் குவியத் தொடங்கியுள்ளனர்
இருப்பினும் கோவில் கோவிலாக சென்று விஜய் ஏதேனும் பரிகாரம் செய்து வருகிறாரோ என நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.


