
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்யவிருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு பின்னர் பட்டியலினத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி கிடைத்ததை ஆதிக்க மனநிலையில் இருக்கும் சில நிர்வாகிகளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதும் அவருக்கு எதிராக நிர்வாகிகளை தூண்டிவிட்டு, அவரது செயல்பாடுகளை முடக்க நினைத்ததும் காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் கடைநிலை தொண்டருக்கு கூட தெரிந்த சேதி. அப்படி இருக்கையில், வெற்றிகரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீட்டை முடித்து, தேர்தலையும் எதிர்கொண்டுவிட்ட பின்னர், இன்னும் எதற்கு சில நிர்வாகிகளின் ஏச்சு, பேச்சுகளுக்கு ஆளாக வேண்டும்? என்ற மனநிலைக்கு செல்வபெருந்தகை வந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்த பின்னர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு அவரை சில நிர்வாகிகள் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ராகுல்காந்தியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் சிலர், செல்வப்பெருந்தகையை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று தூபம் போட்டிருப்பதாகவும், அதுவும் தேர்தல் நேரத்தில் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட எம்.பி ஒருவர், எப்படியாவது இந்த முறை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை பெற்றுவிட வேண்டும் என விடா முயற்சியோடு, தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறுகிறார்கள் சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, தொடக்கம் முதலே செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், செல்வப்பெருந்தகையே பதவியை ராஜினாமா செய்ய முற்பட்டாலும், அதனை ஏற்கும் மன நிலையில் கார்க்கே இல்லையென்று கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வரும் என்ற ரிப்போர்ட் கிடைத்திருக்கும் நிலையில், செல்வப்பெருந்தகையை கட்சியின் தலைவராகவே நீட்டிக்க கார்க்கே விரும்புவதாகவும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


