
தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கிறது. பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லி தான் தவெக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மத்திய அரசை எதிர்க்கும் விஷயத்தில் தவெக பின்வாங்கியதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் அமைச்சர் அருண்ராஜ் ஒரு கருத்தை சொல்லியுள்ளார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெக அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தவெக மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை கொண்ட கட்சி. குதிரை பேரத்திற்கான அவசியம் இல்லை. முதலமைச்சர் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் குதிரை பேரம் என்கிற பேச்சிற்கே இடம் இல்லை என தெரிவித்துள்ளார்
மத்திய அரசை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக எல்லாம் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில உரிமைகள் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் தவெக முதல் ஆளாக குரல் கொடுக்கும். அதற்காக தீவிரமாக போராடும். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. அதனால் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என தவெக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்
ஆனாலும் மத்திய அரசை இணக்கமான சூழ்நிலையில் தான் அணுகுவோம். மத்திய அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றுவோம். மாநில உரிமைகளுக்காகவும் எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு தேவையான நிதிகளை பெற்று திட்டங்களை நிறைவேற்றுவோம்” என தவெக அமைச்சர் அருண் ராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்


