
விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை அவமதிப்பதா என கமல்ஹாசன் பொங்கி எழுந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை எனவும், இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என ஸ்டாலின் அறிவித்திருப்பதாகவும், அவரது அரசியல் முதிர்ச்சியை மதிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ள கமல்ஹாசன்,
இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளபோது, அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என கமல் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல என, எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன்,
தாம் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல, ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்று, அதே கட்சியின் தயவால் ராஜ்யசபா எம்.பியாக இருந்தாலும், ஜனநாயகத்துக்கு ஒன்று என வரும்போது யோசிக்காமல் கமல்ஹாசன் குரல் கொடுப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.


