
பாமாயில் என்றாலே உடலுக்கு தீங்கு என்ற பார்வை உள்ளது. நிஜமாகவே பாமாயில் உடலுக்கு தீங்கு தரக்கூடியதா? பாமாயிலில் சத்துக்கள் உள்ளதா? இதை முறைப்படி சுத்தப்படுத்தி, உபயோகப்படுத்தினால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மையா? டாக்டர்கள் சொல்வது என்ன? ரேஷன் பாமாயில் ஆரோக்கியமானதா? பித்தம் நீக்கி பயன்படுத்தும் எளிய முறைகள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ரேஷன் கடைகளில் மலிவான விலையில் பாமாயில் வழங்கப்படுவதால், பலரும் இது தரம் குறைந்த எண்ணெய் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பாமாயிலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, இதிலுள்ள இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை
தேங்காய் எண்ணெயை விட பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) குறைவுதான். பாமாயிலில் ஆரோக்கியமான கொழுப்புகள் சம அளவில் இருப்பதால், இது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதய நோய் வருமோ என்று அச்சப்படுபவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையின்படி இதனை மிதமான அளவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் பாமாயிலில் இருக்கும் பித்தத்தை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். பாமாயிலை சட்டியில் வைத்து அதில் இஞ்சி மற்றும் புளி இரண்டையும் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இஞ்சி புளி கருப்பு நிறமாக மாறியதும் அதை எடுத்து விட்டு பாமாயிலை வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.
பாமாயிலை அப்படியே பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகரிக்கும். இதனால் சிலருக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். எனவே, ரேஷன் பாமாயிலை வாங்கியவுடன் அதனைச் சுத்திகரிப்பு செய்துவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்தது.


