
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார். ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் சேர்த்து 113 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்? என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்யும் பட்சத்தில், பெரும்பான்மையை எட்ட இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும், எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது? என்றும் ஆளுநர் விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று யூகத்தின் அடிப்படையில் தாம் செயல்பட வேண்டுமா என ஆளுநர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பதவியேற்ற பின் பெரும்பான்மை கிடைத்து விடும் என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?’ போன்ற பல கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
மேலும், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தால் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள். உங்கள் ஆட்சி கவிழும். மக்களிடம் தேவையில்லாத குழப்பங்கள் வரும்’ எனவேதான் இந்த காலதாமதம் என ஆளுநர் விஜயிடமும் தவெக முக்கிய நிர்வாகிகளிடமும் சொன்னதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்யும், தவெக நிர்வாகிகளும் விளக்கம் அளித்ததாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.


