அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பின்னால், சீனாவின் அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் (Chinese satellite tech) பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) பத்திரிகை மிகப்பிரம்மாண்டமான புலனாய்வு அறிக்கையை வெளியிட்டு உலகை அதிர வைத்துள்ளது!
கசிந்த ஈரானிய ராணுவ ஆவணங்களின்படி, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படை (IRGC), கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியில் ‘எர்த் ஐ கோ’ (Earth Eye Co) என்ற சீன நிறுவனம் விண்வெளியில் செலுத்திய ஒரு அதிநவீனச் செயற்கைக்கோளை முழுமையாக விலைக்கு வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஈரானின் சொந்தச் செயற்கைக்கோள்களை விடச் சீனச் செயற்கைக்கோள் பலமடங்கு துல்லியமான படங்களை (high resolution imagery) வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தித் தான் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஜோர்டான் மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை (US military bases) ஈரான் மிகத் துல்லியமாகக் கண்காணித்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சீனச் செயற்கைக்கோள் மட்டுமின்றி, பீஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ‘எம்போசாட்’ (Emposat) என்ற வணிகரீதியான தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களின் தரவுகளையும், சேவைகளையும் ஈரானிய ராணுவம் (IRGC) பயன்படுத்திக் கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் ஆவணங்களில் உறுதியாகியுள்ளது.
இதுகுறித்துச் சீனத் தூதரகத்திடம் கேட்டபோது, இந்த தகவல்கள் உண்மை அல்ல என மறுத்து விட்டது.
அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ள நிலையில், ஈரானுக்குச் சீனா வான்பாதுகாப்பு அமைப்புகளை (Air defense systems) வழங்கவுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. தற்போது விண்வெளித் தொழில்நுட்பத்தையும் சீனா வழங்கியிருப்பது அம்பலமாகியுள்ளதால், அமெரிக்க-சீன உறவில் இது மாபெரும் விரிசலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!


