ட்ரெயினுக்கு ஓனரான ஒரே இந்தியர் – யார் அவர்?

இந்திய ரயில்வேயைத் தவிர ஒரு ரயிலை யாராவது சொந்தமாக வைத்திருக்க முடியுமா? என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?… சொந்தமாக ஜெட் ப்ளைட், ஹெலிகாப்டர், சொகுசு கப்பல் ஆகியவற்றை வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, அசீம் பிரேம்ஜி போன்ற இந்திய பணக்காரர்கள் கூட சொந்தமாக ஒரு ட்ரெயினை வைத்துக்கொள்ள முடியாத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு விவசாயி இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
இந்த அசாதாரணச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு லூதியானா – சண்டிகர் ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் செய்த தவறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம். லூதியானாவில் உள்ள கட்டனா கிராமத்தில் நிலம் கையகப்படுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு அருகிலுள்ள கிராமத்தில் ஏக்கருக்கு ரூ.71 லட்சம் வழங்கப்பட்டதை அறிந்த சம்புரான் சிங் என்ற விவசாயி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் மூலம் ஏக்கருக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தை ரூ.50 லட்சமாக ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. ஆனால், விவசாயி பின்வாங்காததால், வேறு வழியே இல்லாமல் இந்தியன் ரயில்வே 1.47 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இத்தொகையை 2015ஆம் ஆண்டுக்குள் செலுத்துமாறு வடக்கு ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், ரயில்வே அதிகாரிகள் செலுத்தவில்லை.
இதனால் முழு இழப்பீடு கோரி சம்புரான் சிங் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். ரயில்வே தனக்கு இதுவரை வெறும் 42 லட்சம் ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தனக்கு முழு தொகையைக் கொடுக்க மறுப்பதாக முறையிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டெல்லி-அமிர்தசரஸ் இடையிலான ஸ்வர்ன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும், லூதியானாவில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ஆனால், அதன்பிறகு ரயில்வே அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகியதையடுத்து அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், நீதிமன்றத்தின் அசாதாரண தீர்ப்பின் மூலம் சதாப்தி எக்ஸ்பிரஸின் ஒரே உரிமையாளராக விவசாயி சம்புரன் சிங் வரலாறு படைத்துள்ளார்.