இளைஞருக்கு சுவிஸ் வாட்ச் பரிசளித்த யூசுப் அலி! அப்படி என்ன செய்தார் அந்த இளைஞர்?

லூலூ அதிபரின் மனதை கவர்ந்த சம்பவம்…
இளைஞருக்கு சுவிஸ் வாட்ச் பரிசளித்த யூசுப் அலி…
கடந்த ஜுலை மாதம் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற லூலூ அதிபர் யூசுப் அலிக்கு, இண்ஸ்டகிராம் பிரபலமான Effin M என்ற இளைஞர் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். அந்த வாட்சை சற்று உற்று நோக்கிய, யூசுப் அலி சிறிது நேரத்தில் கண் கலங்கினார். காரணம் அந்த வாட்சில், யூசுப் அலியின் தாயாரின் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2001ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில் யூசுப் அலியின் தாய், தந்தை இருவரும் உயிரிழந்தனர். அப்போது, யூசுப் அலி வளர்ந்து வந்த நேரம் ஆகும். இச்சம்பவம் அவரது வாழ்வில் தழும்பாக உள்ளது.
இதன் காரணமாகவே யூசுப் அலி, அந்த கடிகாரத்தை பார்த்து, கண்ணீர் வடித்தார். அப்போது பேசிய அந்த இளைஞர், தாய் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா என்று கேட்க, யாருக்குத் தான் தாயை பிடிக்காது என யூசுப் அலி, கண்ணீர் மல்க பேசினார்.
இந்தச் சம்பவம் நடைபெற்று, 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது, அந்த இளைஞரை தொடர்ந்து நினைவில் வைத்திருந்த யூசுப் அலி, கொச்சியில் உள்ள லூலூ தலைமையகத்திற்கு அந்த இளைஞரை வரவழைத்தார்.
அங்கு சென்ற அந்த இளைஞருக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சுவிட்சர்லாந்து கைக்கடிகாரமான ராடோ வாட்சை அன்பளிப்பாக வழங்கினார். கஸ்டமைஸ் செய்யப்பட்ட அந்த வாட்சில், யூசுப் அலியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஓய் என்ற எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது.
தனது தாயாரை நினைவுபடுத்திய இளைஞரை நினைவில், வைத்து, அவருக்கு பரிசு வழங்கிய யூசுப் அலியின் செயல், பாராட்டுக்களை பெற்று வருகிறது.
லூலூ குழுமம் உலகம் முழுவதும் 256 ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்களை இயக்கி வருகிறது. யூசுப் அலியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
=====