அமெரிக்க அதிபர் தேர்தல்; வரலாற்றுச் சாதனை படைத்த டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தொழிலதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் முதன் முறையாக 2016ம் ஆண்டு தேர்தலில் வென்று அமெரிக்க அதிபரானார். ஹெச் 1 பி விசாவுக்கு தடை விதித்தது முதல் கொரோனாவை சீன வைரஸ் எனக்கூறியது முதல் பல்வேறு பரபரப்புகளை கிளப்பினார். மீண்டும் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் படுதோல்வியைச் சந்தித்தார்.
பொதுவாக தேர்தலில் தோல்வியடையும் அமெரிக்க அதிபர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது கிடையாது. ஏற்கனவே 2 முறை தேர்தலி போட்டியிட்ட அனுபவத்தோடு 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் களம் கண்டார்.
டிரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் தொடக்க நிலையிலேயே பின்வாங்க, கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தன்னை மாற்றத்திற்கான தலைவராக அறிவித்துக் கொண்ட டிரம்ப், ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டினார்.
மேலும் பைடன் ஆட்சியில் விலைவாசி உயர்ந்திருந்தது, விலை உயர்விற்கு ஏற்ற சம்பளம் இல்லாமை போன்றவற்றை சுட்டிக்காட்டிய டிரம்ப், அமெரிக்க பொருளாதாரத்தையே டிரம்ப் சீர்குலைத்துவிட்டதாக சாடினார்.
மற்றொருபுறம் எலான் மஸ்க் போன்ற தொழிலதிபரின் உற்சாகமான பரப்புரையும், ஆதரவும் டிரம்பின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தான் மீண்டும் அதிபரானால் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன் என்ற வாக்குறுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் ஆதரவுடன் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக 2வது முறை டிரம்ப் பெற்ற இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் 132 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் ஒருமுறை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிடையாது. தற்போது அந்த சாதனை டொனால்ட் டிரம்ப் படைத்திருக்கிறார்.