
போலே பாபா நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்துக்கான உண்மை காரணங்கள் அம்பலம்…
பாபாவின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்க முயற்சித்த போது, ஏற்பட்ட விபத்து…
காலடி மண்ணை எடுக்கச் சென்ற பலரும் பரிதாபமாக பலி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான பின்னணி காரணங்கள் வெளியாகி வருகின்றன.
முதலில் நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்க்கலாம்.
ஆன்மீக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, போலே பாபா அங்கிருந்து வெளியேறி தனது வாகனத்தில் ஏற வந்துள்ளார். அப்போது, கடும் வெயில் நிலவியதால், பக்தர்கள் பலரும் முன்னதாகவே அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளனர்.
அவர்களை ஆசிரம காவலர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். பாபா சென்ற பிறகு தான் நீங்கள் செல்ல முடியும் என கூறியுள்ளனர். ஆனால் சிலர் பாபா வை பார்க்க முண்டியடித்தால், நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதனிடையே பல பக்தர்கள் பாபாவை நெருங்கி அவரது காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்க சென்றுள்ளனர். பலர் அவர் நடந்து சென்ற காலடி மண்ணை எடுக்க முயற்சித்து, அவரை நெருங்கியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட நெரிசலில், மண்ணை எடுக்க கீழே குனிந்தவர்கள், காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்க முயன்றவர்கள் என பலர் மீதும் பின்னால் வந்தவர்கள் ஏறி மிதித்து முன்னேற முயன்றுள்ளனர்.
சில பக்தர்கள் அவரது வாகனத்தை நிறுத்தி, பாபாவின் காலில் படிந்த மண்ணை தங்களுக்குத் தர வேண்டும் எனக் கூறி அவரது காரை நிறுத்தியுள்ளனர். அவர்களை காவலர்கள் விரட்டியடித்துள்ளனர்.
மேலும் சில பக்தர்கள் அருகே இருந்த வயல்வெளிகளை கடந்து, பாபாவை நெருங்க முயன்றுள்ளனர். அந்த வயல் வெளி சேறும் சகதியுமாக இருந்ததால், அதில் விழுந்து, வாய், மூக்கில் சேறு புகுந்து, மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் செல்போன்கள், காலணிகள், பணப் பை உள்ளிட்ட பொருட்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் மாபெரும் துயரச் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் பாபாவின் ஆசிரம காவலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பக்தர்களும், காவல்துறையினரும் எழுப்பியுள்ளனர்.
=====