
வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய சுள்ளான்கள்…
தர்ம அடியில் இருந்து தப்பி ஓட்டம்…
பைக்குகளை தூக்கி வீசி சம்பவம் செய்த பொதுமக்கள்…
18 வயதுக்கும் குறைவான சுள்ளான்கள், பெற்றோரிடம் இருந்து எப்படியோ பைக்குகளை கைப்பற்றி வந்து, சாலைகளில் ஸ்டன்ட் செய்வது, வீலிங் செய்வது என தங்களது சாகசங்கள் மூலம் பொதுமக்களின் உயிருக்கு வேட்டு வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பெங்களூருவில் இந்த சுள்ளான்களுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளனர் பொதுமக்கள். நீல மங்களா பகுதியில் மேம்பாலத்தில் 4 பைக்குகளில் வந்த 8 சுள்ளான்கள், ஸ்டன்டில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ஒரு பைக், மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, 2 பைக்குகளை அங்கேயே போட்டு விட்டு, 8 பேரும், 2 இரு சரக்கர வாகனங்களுடன் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள், அவர்களிடம் சிக்கிய 2 கியர் லஸ் பைக்குகளை அல்லேக்காக தூக்கி, 30 அடி உயரத்தில் இருந்து, கீழே உள்ள சாலையில் வீசி எறிந்தனர். இதனால் பைக்குகள், இரண்டும் அக்கு வேறு ஆணி வேறாக சிதறின. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீசார், தப்பி ஓடிய சுள்ளான்களை அடையாளம் கண்டு, அவர்களது பெற்றோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் போலீசார் கூறும் போது, கடந்த 8 மாதத்தில் மட்டும், சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்கிய பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்கள் மீது 74 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அபராதமாக 5 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகமாக வீலிங் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
====