தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லாவை நீக்கிய அரபு லீக்! வலுப்பெறும் ஷியா – சன்னி ஒற்றுமை!

காசா போரால் வலுப்பெற்றுள்ள ஷியா சன்னி ஒற்றுமை…
தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லாவை நீக்கிய அரபு லீக்…
10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிஸ்புல்லா – அரபு லீக் பேச்சுவார்த்தை.,..
மத்திய கிழக்கு அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. சவுதியின் ஆதிக்கம் நிறைந்த, அரபு லீக் அமைப்பில், அரபு மொழி பேசும் 22 முஸ்லீம் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பெரும்பாலும் சன்னி பிரிவினரை உள்ளடக்கியதாக உள்ளது. தற்போது காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மாபெரும் இனப்படுகொலையை தடுக்க இந்த அமைப்பால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதே நேரம் ஷியா பிரிவு நாடான ஈரான் மற்றும் அதன் கூட்டணிப் படைகள், இஸ்ரேலுக்கு கடும் பதிலடியை கொடுத்து வருகின்றன. அதில் முக்கியமான அமைப்பு லெபானானின் தெற்கு பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹிஸ்புல்லா.
காசாவில் சன்னிப்பிரிவு மக்கள் கொன்று குவிக்கப்படும் போது, அதனை தடுக்க எந்த சன்னிப்பிரிவு போராளிக்குழுக்களும் முன்வரவில்லை. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, இந்தப் போரில் 500க்கும் மேற்பட்ட தனது வீரர்களை இழந்துள்ளது.
இந்த நிகழ்வால், சன்னிப்பிரிவினர் இடையே, ஹிஸ்புல்லா மற்றும் ஏமன் ஹவுத்திப் படைகளின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம்ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அரபு லீக் அறிவித்தது. முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு அமைப்பாக செயல்படும் அரபு லீக் இந்த முடிவை அறிவித்ததில் யாருக்கும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் தற்போது, காசா படுகொலையை தடுக்கத் தவறிய அரபுலீக் உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு அமைப்புகள் மீது சன்னிப்பிரிவு இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கும் நிலைக்கு அரபு லீக் தள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஹிஸ்புல்லாவை தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து நீக்குவதாக அரபு லீக் அறிவித்துள்ளது.
அரபுலீக்கின் இணைப் பொதுச் செயலாளர் ஹோசம் சக்கி (Hossam Zaki) பெய்ரூட்டில், லெபனான் மக்களவை உறுப்பினரும், ஹிஸ்புல்லா அரசியல் பிரிவு தலைவருமான Mohammad Raad என்பவரை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, அரபுலீக் பொதுச் செயலாளர், “ஹிஸ்புல்லாவை இதற்கு பிறகும் தீவிரவாத இயக்கமாக கருதமுடியாது. தெற்கு லெபனானை பாதுகாக்கும் பொறுப்பு ஹிஸ்புல்லாவிடம் உள்ளது. லெபனானின் எதிர்காலம் ஹிஸ்புல்லா கையில் தான் உள்ளது. லெபனான் மீதான தாக்குதலை அரபு லீக் கடுமையாக எதிர்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான 9 மாதத் தாக்குதல்கள் மூலம் ஹிஸ்புல்லா உலக இஸ்லாமியர்களிடம் மிகப்பெரும் செல்வாக்கை பெற்றிருப்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
====