அம்பானியை தொடர்ந்து மற்றொரு கோடீஸ்வரர் கல்யாணத்தில் ரஜினிகாந்த்!

லூலூ நிறுவன இயக்குநர் இல்ல திருமண நிகழ்ச்சி…
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த்…
பாட்டு பாடி அசத்திய தொழில் அதிபர் யூசுப் அலி…
அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அங்கு போட்ட குத்தாட்டம் வைரலானது. இதனைத் தொடர்ந்து, இன்னொரு கோடீஸ்வரர் வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி காந்த். லூலூ நிறுவன இயக்குநர் எம்.ஏ சலீம் அவர்களின் மகள் நவ்ரீன் திருமணம் திருச்சூரில் உள்ள ஹையாத் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் சென்று கலந்து கொண்டார். அவரை யூசுப் அலி வரவேற்றார். இந்த திருமணத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் ஐக்கிய அரபு அமீரக மன்னர் குடும்பத்தினர், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யூசுப் அலியின் உறவினர் தான் லூலூ இயக்குநர் எம்.ஏ. சலீம். லூலூ அதிபர் யூசுப் அலியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில், சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய். லூலூ நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 256 ஹைப்பர் மால்கள் உள்ளன.
இந்த திருமணத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், நடிகை ராதிகா சரத்குமார், ஜோய் ஆலுக்காஸ் நிறுவன அதிபர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக, தொழில் அதிபர் யூசுப் அலி, மலையாள பாடல் ஒன்றை பாடி அசத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் யூசுப் அலியின் தாயாரின் உருவம் பொறித்த கைக் கடிகாரம் ஒன்றை ஒரு இளைஞர் பரிசாக வழங்கினார்.
===