நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லட்டுகள் தயாரிப்பு!

திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதலமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பதி லட்டின் பாரம்பரியம், எவ்வளவு தூய்மையாக அந்த லட்டு தயாரிக்கப்படுகின்றது, ஒவ்வொரு நாளும் எத்தனை லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன போன்ற விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திருப்பதி லட்டு என்பது 1715ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஜி.ஐ. என்று சொல்லப்படக் கூடிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே லட்டு தயாரிக்க அனுமதிக்கப்படுகின்றனர். உதவியாளர்கள் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. எனினும் ஒரு முறை, பிராமணர் அல்லாத உதவியாளர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டனர்.லட்டு தயாரிப்பாளர்கள் தங்களது தலையை முழுவதுமாக மலித்திருப்பார்கள். ஒரே ஒரு தூய அங்கியை அணிந்திருக்க வேண்டும். இந்த லட்டு தயாரிக்கும் கிட்சனை Laddu Potu என அழைக்கின்றனர்.
க்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக, பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதற்கு மேல் ஒரு லட்டுவின் விலை 50 ரூபாய்.தூய நறுமணம் மிக்க நெய், கடலை மாவு, சர்க்கரை, சர்க்கரை கட்டி, முந்திரி, ஏலக்காய், கற்பூரம், திராட்சை உள்ளிட்ட 10 பொருட்கள் சேர்த்து லட்டு தயாரிக்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு 500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ திராட்சை, 200 கிலோ ஏலக்காய் ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை நெய் கொள்முதல் நடைபெறுகிறது. ஆண்டிற்கு 5 லட்சம் கிலோ நெய் வாங்கப்படுகிறது.
ஆன்லைன் ஏலம் மூலம் நெய் வாங்கப்படுகிறது. ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களில் தேவஸ்தான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, தரத்தை உறுதி செய்கின்றனர்.
தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சப்ளையை ரத்து செய்கின்றனர். கடந்த 2022 மற்றும் 2023 ஓராண்டு காலக்கட்டத்தில் மட்டும் தரம் குறைவாக இருப்பதாக கூறி, 42 நெய் லாரிகள் திருப்பி விடப்பட்டு, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கர்நாடக பால் உற்பத்தி கூட்டமைப்பில் இருந்து வாங்கப்பட்ட நெய் நிறுத்தப்பட்டு, அமுல் நிறுவனத்திடம் இருந்து வாங்கத் தொடங்கியுள்ளனர். பல நிறுவனங்கள் நெய் சப்ளை செய்து வருகின்றன.ஒரு லட்டுவின் எடை 175 கிராம் முதல் 75 கிராம் வரை வேறுபட்ட வடிவில் உள்ளது. எடை போடும் இயந்திரம் இல்லாமல், கைகளாலேயே உருட்டி, இதனை தயாரிக்கின்றனர்.
இந்த லட்டுகளில் போதிய அளவில் முந்திரி உள்ளிட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை, ஒவ்வொரு பேட்ஜ், பேட்ஜாக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இரண்டு ஷிப்டுகளில் சுமார் 600 பேர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சாதாரண நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகளும், பண்டிகை காலங்களில் 4 லட்சம் லட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.
லட்டுவின் தரத்தை சோதனை செய்ய அவ்வப்போது, ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு திருப்பதி தேவஸ்தானம் லட்டு விற்பனை செய்கிறது.தற்போது, லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பரிசோதனைக் கூட ஆய்வு முடிவுகளை பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற லேப் முடிவுகள் பல நேரங்களில் தவறுதலாக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் இதனை ஒரு அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என ஆந்திர எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூறுகிறது.திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் முன்னாள் தலைவர்கள் 2 பேர் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளனர். பக்தர்கள் அச்சம் அடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.