குற்ற கூட்டாளிகள்!

அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியரான Linda J. Bilmes, ஆய்வாளர்களான William D. Hartung மற்றும் Stephen Semler ஆகியோருடன் இணைந்து செப்டம்பர் 11, 2001- இல் இருந்து இன்று வரை அமெரிக்க போருக்காக எவ்வளவு பொருளாதாரம் செலவு செய்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டுகளில் காசா மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த போருக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா செலவு செய்திருப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.கடந்த ஒரு ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 17.9 பில்லியன் டாலர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் ராணுவத்திற்காக அமெரிக்கா கொடுத்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் கோடியாகும்.
இதுபோக இஸ்ரேலை பாதுகாப்பதற்காக மத்திய கிழக்கின் பல பகுதிகளில் அமெரிக்கா ராணுவம் நேரடியாக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.கடந்த ஆண்டு மட்டும் இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்க செலவிட்டு இருக்கும் தொகையானது கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டாலர்களாகும். இந்திய ரூபாயின் மதிப்பில் 50 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்க ராணுவம் நேரடியாக இந்த போரில் செலவு செய்திருக்கிறது.ஆக மொத்தத்தில் இந்தப் போருக்காக இதுவரை இரண்டு லட்சம் கோடியை அமெரிக்க செலவு செய்திருக்கிறது.இது போக இஸ்ரேலுக்கு ஏராளமான போர் ஆயுதங்களை அமெரிக்க கடந்த ஒரு ஆண்டுகளில் அனுப்பி இருக்கிறது.
குறிப்பாக பங்கர்களை அழிக்கும் 2000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள், உயர்தர பீரங்கிகள் என பல்வேறு வகையான பேரழிவு ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து அனுப்பி கொண்டே வருகிறது.உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை அமெரிக்க பொதுவெளியில் பதிவு செய்து வைத்திருப்பது போல், இஸ்ரேலுக்கு அனுப்பும் ஆயுதங்கள் குறித்தான தகவல்களை அமெரிக்கா பொதுவெளியில் பதிவு செய்யவில்லை. பைடனின் நிர்வாகம் புற அழுத்தத்தின் காரணமாக இது குறித்த தகவல்களை மறைப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
====