ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானை இறங்கி அடிக்க ஆரம்பித்த இந்தியா
உட்கார்ந்த இடத்தில் இருந்தே பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!- 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் தும்சம்

காஷ்மீரின் பஹல்காமில் 27 அப்பாவி உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ராஜதந்திர உறவுகள் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த இந்தியா இன்று, பாகிஸ்தானுக்குள் 4 இலக்குகளையும் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கி தும்சம் செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் கோட்டைகளை குறிவைத்தது இந்தியா தாக்கியுள்ளது.
பஹவல்பூரில் மர்கஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலானில் இருந்த சர்ஜால், கோட்லியில் அமைந்திருந்த மர்கஸ் அப்பாஸ், முசாபராபாதில் இருந்த சையத்னா பிலால் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் 4 முகாம்கள், முரிட்கேவில் இருந்த மார்கஸ் தைபா, பர்னாலாவில் இருந்த மர்கஸ் அஹ்லே ஹதீஸ், முசாபராபாத் இருந்த ஷவாய் நல்லா கேம்ப் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் தரைமட்டமாகியுள்ளன.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளின் சியால்கோட்டில் இருந்த மெஹ்மூனா ஜோயா முகாம், கோட்லியில் இருந்த மஸ்கர் ரஹீல் ஷாஹித் ஆகிய முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.