இஸ்ரேல் உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – ஸ்காட்லாந்து அரசு அறிவிப்பு

பிரிட்டனின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்தில், இஸ்ரேலுக்கு எதிரான கடும் மனநிலை நிலவுகிறது. காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் போர்க்குற்றங்கள் குறித்து, அண்மையில், இரு நாட்டு தூதர்கள் இடைய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்காட்லாந்து தூதர், இஸ்ரேலுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ள ஸ்காட்லாந்து, இஸ்ரேல் உண்மையான அமைதி முயற்சிகளை மேற்கொள்ளும் வரை, அதன் அதிகாரிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்காட்லாந்து வெளி விவகாரத்துறை செயலாளர் External Affairs Secretary Angus Robertson கூறியுள்ளதாவது, காசாவில் உடனடி போர்நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்துவதற்காகவே அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதனை சரியாகச் செய்தோம். இஸ்ரேலின் செயல்களை அங்கீகரிப்பது, அந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் அல்ல. காசாவில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு சாட்சியாக இருந்து, அவற்றை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அதே நேரம் இந்தப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தவிர வேறு எந்த விவகாரத்தையும் பேசி இருக்கக் கூடாது. இனி இஸ்ரேல் உண்மையிலேயே அமைதி உடன்படிக்கையை எட்டும் வரை, அந்நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.