தவறான ரூட்டில் சென்ற ஆதீனம் – அவதூறை அம்பலப்படுத்திய காவல்துறை
தொப்பி அணிந்து தாடி வைத்திருந்தவர்கள் காரில் வேகமாக வந்து தனது காரை இடித்து தன்னை கொல்ல முயற்சி செய்ததாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டை வைத்திருந்த நிலையில் அது திட்டவட்டமான அவதூறு என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தன்னை வாகன விபத்து மூலம் கொலை செய்ய முயற்சி செய்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. இருபிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் வதந்தியை பரப்பிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் அப்பகுதியில் இருந்த CCTVயை ஆராய்ந்த போது மதுரை ஆதீனத்தின் அவதூறு வதந்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதுரை ஆதீனம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கமாக தவறான ரூட்டில் சென்றுள்ளது.அப்போது அவரது கார் சென்னை மார்க்கமாக மெதுவாக சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.இதில் மதுரை ஆதீனம் சென்ற காரின் இடது பின்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.மற்றொரு காரின் முன் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்களாகவே அந்த இடத்திலிருந்து சென்று விட்டதாக அந்த இடங்களில் பதிவான CCTV காட்சிகள் மூலம் காவல்துறை உறுதிபடுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உண்மை சம்பவம் இப்படி இருக்க அந்த கார் வேகமாக வந்து தன்னை கொல்ல முயற்சித்ததாகவும், அந்த காரில் குறிப்பிட்ட சமூகத்தினர் இருவர் மட்டுமே இருந்ததாகவும் கூறி மதுரை ஆதீனமும் அவரது ஓட்டுநரும் அளித்த பேட்டியால் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே சமூக பதட்டங்களை உண்டாக்கும் வகையில் தவறான கருத்தை பரப்பிய மதுரை ஆதீனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ம. முகமது கவுஸ் புகார் அளித்துள்ளார்.