“தண்ணீரை தொடர்ந்து தரையிலும் அதிர்ச்சி அளிப்போம்”

காசா மக்களுக்காக நிலத்திலும் போராடுவோம்…
பல்லாயிரக்கணக்கான ஏமன் வீரர்கள் தயார்…
ஹவுத்தி தலைவர் சூளுரை…
வியாழன் அன்று ஏமன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டின் தலைவர் சையது அப்துல் மாலிக் அல் ஹவுத்தி, கடலில் எதிரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருவது போன்று, விரைவில் தரையிலும் கொடுப்போம் என சூளுரைத்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, காசா மீதான அமெரிக்க, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் என்பத உலக இஸ்லாமிய “உம்மத்” மீதான தாக்குதல் ஆகும். கொலை, பட்டினி, அவமானம், குர் ஆன் எரிப்பு, பள்ளிவாயில்கள் இடிப்பு உள்ளிட்ட உட்சபட்ச கொடுமைகள் நடைபெறும் இந்த நேரத்தில், இவை அனைத்தையும் சில அரபு நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன.
அதுமட்டுமின்றி இந்த அரபுகள், இஸ்ரேலிய எதிரிகளுடன் கைகோர்த்து, இந்த இனப்படுகொலையின் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளையும் செய்கின்றனர். இது வெட்கக் கேடானது. ஆனால் ஒரு நாளில், அமெரிக்காவாலும், இஸ்ரேலாலும் இவர்கள் கைவிடப்படுவார்கள். இந்த துரோகிகளை பற்றி இஸ்ரேலுக்கு நன்றாக தெரியும். இந்த துரோகிகள் ஒரு போதும் புனிதப் போரில் ஈடுபடமாட்டார்கள். தங்கள் உயிர்களை தியாகம் செய்ய முன்வர மாட்டார்கள்.
எந்த நவீன ஆயுதமும் இன்றி தங்களுக்கு கிடைத்ததை வைத்து, போரிடும் காசா போராளிகளின் உறுதி, அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். அவர்களது நடவடிக்கை தான் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை தரும்.
இவ்வளவு பெரிய அநீதிகளை கட்டவிழ்த்தும் கூட எதிரிகள் தாங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து தோல்வியில் தான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டனர்.
காசா போர் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே, அங்கு நேரடியாக சென்று, எதிரிகளுடன் போர் புரிவதற்கு, பல்லாயிரக்கணக்கான ஏமன் வீரர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் அரபு பூகோள அமைப்புப் படி, நாம் நேரடியாக நம் சகோதரர்களுடன் சேர முடியாது. ஏதாவது ஒரு அரபு நாட்டின் வழியாகவே செல்ல முடியும். ஆனால் நமக்கு வழிவிட வேண்டிய அரபு நாடுகள், நம்மை அனுமதிக்க தயாராக இல்லை. அவர்கள் எதிரிகளுக்கு உதவுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் ஒரு போதும் நமக்காக அவர்களது எல்லைகளை திறந்து விட மாட்டார்கள்.
இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை நாம் தாக்கக் கூடாது என்பதற்காக, ஏமன் மீது பலகட்டத் தாக்குதல்களை அமெரிக்காவும் அதன் கூட்டுப்படையும் நடத்தியுள்ளன. ஆனால் ஒரு போதும் அவர்களால் நம் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி, கடலில் நாம் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தேமோ, அதேப் போல், விரைவில் தரையிலும் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்போம்.
இந்தப் போரில் நமது வலிமை சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், பாலஸ்தீனத்தை விடுவிக்கும் நமது பாதையில், நாம் உறுதியாக இருப்போம். இறைவன் நாடினால் நிச்சயம் நம் இலக்கை அடைவோம்.
இவ்வாறு, ஏமன் அன்சர் அல்லாவின் தலைவரும், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவருமான சையது அப்துல் மாலிக் அல் ஹவுத்தி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தியுள்ளார்.
==========