லட்டு குற்றச்சாட்டு – சந்திரபாபு நாயுடுவின் பால் சாம்ராஜ்யம்!

திருப்பதி லட்டுவில் கலக்கப்படும் நெய்யில், பசு, பன்றி, மீன் எண்ணெய் சேர்க்கப்படுவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ள சந்திர பாபு நாயுடுவின், பால் நிறுவனம் பற்றியும், அது வளர்ந்த கதை பற்றியும் செய்திகள் வைரலாகி வருகின்றன. அவற்றை பார்க்கலாம்.அரசியல்வாதியாக அறியப்படும் சந்திரபாபு நாயுடு, பெரும் தொழில் அதிபரும் கூட.1994ஆம் ஆண்டு 80 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த ஹெரிடேஜ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். சில ஆண்டுகளிலேயே அந்த நிறுவனம் 54 சதவீத வளர்ச்சியை பெறுகிறது.தனது மாமனார் என்.டி. ராமாராவின் ஆட்சியை கவிழ்த்து, அவரது எம்எல்ஏக்களின் உதவியில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு, 1995ஆம் ஆண்டு பதவி ஏற்கிறார்.இவர் முதலமைச்சராக பதவியில் இருந்த காலக்கட்டத்தில் ஆந்திராவில் இருந்த மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான விஜயா டெய்ரி இழுத்து மூடப்படுகின்றது.
மற்றொரு பக்கம் ஹெரிடேஜ் அசுர வளர்ச்சி அடைகின்றது. ஹேரிடேஜின் தற்போதைய மதிப்பு சுமார் 5000 கோடி ரூபாய். ஆண்டு வருமானம் மட்டும் 3208 கோடி ரூபாய்.தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சம் வாடிக்கையாளர்கள் ஹெரிடேஜ் பாலை வாங்குகின்றனர். நாடுமுழுவதும் 18 பதப்படுத்தும் நிலையங்கள் உள்ளன. நாடுமுழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரம் கடைகள் உள்ளன. 9 மாநிலங்களில் பாலை வாங்கி, 11 மாநிலங்களில் விற்பனை செய்கிறது ஹெரிடேஜ்.
திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு நெய் சப்ளை செய்து வந்த, கர்நாடக அரசின் நந்தினி நெய் நிறுத்தப்பட்டு, அமுல் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்பட்டு வந்தது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு பிறகு, மீண்டும் நந்தினியிடம் நெய் வாங்க தொடங்கியுள்ளனர்.தமிழ்நாட்டின் ஆவினை போல, கர்நாடகாவின் அரசு பால் நிறுவனம் நந்தினி. சுமார் 21ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டது. பால் உற்பத்தி தொழிலில் சந்திரபாபு நாயுடு ஈடுபடுவதால், திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய் விவகாரத்தில், இவருக்கு வர்த்தக நோக்கங்கள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.