இந்திய பெண்ணை தலை குனிந்து வணங்கும் ஜப்பான் மான் – வைரல் வீடியோ!

ஜப்பானின் நாரா பூங்காவில் மான் இந்திய பெண் ஒருவரின் வணக்கத்தை ஏற்று அதேபோல் தலைகுனிந்து மரியாதை செய்யும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களைப் போலவே ஜப்பானியர்களும் மரியாதைக்கு பெயர் போனவர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெரியவர்களைப் பார்த்தால் எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்கள். பள்ளிகளில் கூட குழந்தைகளுக்கு கல்வியை விட ஒழுக்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானியர்களின் இந்த மரியாதை குணம் அவர்களது பூங்காவில் வளரும் மான்களுக்கும் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்தியாவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரான திவ்யா நாரா மான்கள் பூங்காவில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் ஜப்பான் முறைப்படி குனிந்து வணக்கம் செலுத்தியதைப் பார்த்த மான், பதிலுக்கு அவரைப் போலவே குனிந்து மரியாதை செலுத்துகிறது. பார்க்கவே நெகிழ்ச்சியான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் வியூஸ்களைக் கடந்து வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், நாரா மான்களின் ஜீன்களிலேயே இந்த மரியாதை உணர்வு கலந்திருப்பதாகவும், நாரா மான்கள் மிகவும் அருமையானவை என்றும் புகழ்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் நாரா மான்கள் மனிதர்களை விட நாகரீகமானவை என்றும், மிகவும் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு தரப்பில் மான்களுக்கு உணவு கொடுக்கிறேன் என்ற பெயரில் பாவம் அதை 100 முறை குனிந்து கும்பிடு போட வைக்காதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.