உலகம்

இஸ்ரேலுக்கு ஆதரவாக விக்கிபீடியா? உலகிற்கு உண்மையைச் சொல்ல போராடும் பாலஸ்தீனியர்கள்!

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விக்கிபீடியா மீது புகார்…
பட்ட துயரங்களை வெளி உலகிற்கு சொல்ல முடியாமல் திணறும் பாலஸ்தீனியர்கள்

செய்திகளை விரிவாக தெரிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள வலைதள வாசிகளால் அதிகம் நம்பப்படுவது விக்கிப்பீடியா. சர்வதேச ஊடகங்கள் முதல் யூடியூபர்கள் வரை விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துத் தான் தகவல்களை வழங்குகின்றனர்.

விக்கி பீடியாவில் பதிவு செய்த யார் வேண்டுமானாலும், தகவல்களை பதிவிடலாம். திருத்தலாம். ஆனால் சில சூழல்களில், சில தகவல்களை நம்மால் திருத்த முடியாது எனக் கூறப்படுகிறது. இங்கிருந்து தான் சிக்கல் ஆரம்பம் ஆகின்றது.
இதன் மூலம் இந்த விக்கிப்பீடியா, எல்லா நேரங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்பதில்லை என தெளிவாகிறது.

இது காசா தாக்குதல் விவகாரம் மூலம் வெளி உலகிற்கு அம்பலமாகியுள்ளது. உதாரணத்திற்கு காசா இனப்படுகொலை என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான, GAZA GENOCIDE என தேடினால், அது விக்கிப் பீடியாவில், காசா இனப்படுகொலை குற்றச்சாட்டு என்ற தலைப்பில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, “Palestinian genocide accusation,” என பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது காசாவில் இனப்படுகொலை நடைபெறவில்லை, அது ஒரு குற்றச்சாட்டு என்று பொருள்படும் வகையில் விக்கிப்பீடியாவில் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜுன் 8ஆம் தேதி, நுசைரத் அகதிகள் முகாம் மீது மாபெரும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அப்பாவி, பெண்கள் குழந்தைகள் உட்பட 276 பேரை படுகொலை செய்தது. 698 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை, நுசைரத் இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு, விக்கிப்பீடியாவில் பதிவிடப்பட்டது.

ஆனால் உடனடியாக அந்த தலைப்பை இஸ்ரேல் ஆதரவு எடிட்டர்கள் நுசைரத் மீட்பு நடவடிக்கை என மாற்றினர். அதாவது, பிணைய கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கை தான் மேற்கொள்ளப்பட்டது, இனப்படுகொலை நடக்கவில்லை என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாற்றியுள்ளனர்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மீண்டும் பாலஸ்தீன் தரப்பு எடிட்டர்கள் அதனை இனப்படுகொலை என மீண்டும் மாற்றியுள்ளனர். விக்கிபீடியாவை பொருத்தவரை அதன் பெரும்பாலான எடிட்டர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களே கருத்துருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

தாங்கள் நாள்தோறும் படும் துன்பம் துயரங்களை விக்கிப்பீடியா மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வர, பாலஸ்தீனியர்கள் முயற்சிக்கும் போது, அதற்கு விக்கிப்பீடியா பெரும் தடையாக இருப்பது தெரியவந்துள்ளது.

தங்கள் அட்டூழியங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருக்க, இஸ்ரேல், விக்கிபீடியா மீது பெரும் கவனம் செலுத்தி வருகிறது. பாலஸ்தீனியர்கள் அல்லது அமைதியை விரும்பும் மக்கள் பதிவிடும் செய்திகளை, தங்களது ஆசிரியர் குழுக்கள் மூலம் திருத்தி, தவறான கருத்துருவாக்களை இஸ்ரேல் வெளியிட்டு வருகிறது.

விக்கிப்பீடியாவில் தங்களுக்கு ஆதரவாக கருத்துருவாக்களை உருவாக்க குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்த குழுவிற்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. பாலஸ்தீனியர்கள் தரப்பில் தனி மனிதர்கள் போராடி உண்மையான கருத்துக்களை வெளியிடும் நிலையில் உள்ளனர். விக்கிப்பீடியாவின் நிறுவனர் Jimmy Wales என்பவர் ஒரு முறை தன்னை “I’m a strong supporter of Israel,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவருக்கு, ஜெருசலம் பல்கலைக்கழகம் சார்பில், விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலக அளவில் உள்ள சமூக வலைதளங்களான, யூ டியூப், முகநூல், டுவிட்டர் போன்ற பல தளங்களும் தொடர்ந்து, இஸ்ரேல் ஆதரவு போக்குடனேயே செயல்படுவதும் கவனிக்கத் தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாக்கப்பட்ட மாற்று ஊடகத்தின் அவசியத்தை காசா போர் உணர்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button