பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர் எச்சரிக்கை
இந்தியா எந்நேரமும் தாக்குதலை தொடங்கலாம் எனும் சூழலில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடியை வழங்குவோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூட்டாக அறிவித்துள்ளனர்.
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக, வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பாகிஸ்தான் தலைவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில்”பாகிஸ்தான் நாடு ஒன்றுபட்டுள்ளது . எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட ஆயுதப் படைகளுக்குப் பின்னால் நாடு நிற்கிறது” எனக் கூறினர்.
முன்னதாக கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் பிரதமர் ஷெரீப் பேசியதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணையில் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஷெரிப் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு நடந்துள்ளது.
பிரதமர் மோடி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதும் பாகிஸ்தான் மீது பல்வேறு ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதும் பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.