ஆள் இல்லா படகு மூலம் சம்பவம் – 2வது கப்பலை மூழ்கடித்த ஹவுத்திக்கள்!

முதல் முறையாக ஆள் இல்லா படகு மூலம் தாக்குதல் நடத்திய ஹவுத்திக்கள்…
பிரமாண்ட சரக்கு கப்பல் நடுக்கடலில் மூழ்கடிப்பு…
இஸ்ரேலுக்கு எதிராக 2வது மிகப்பெரும் தாக்குதல்…
காசா மக்கள் மீது இஸ்ரேல் 261வது நாளாக கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 38 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலை, ஐ.நா. மன்றத்தாலோ, அல்லது அரபு நாடுகளாலோ, தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான போர் அறிவிப்பை ஏமன் நாட்டை ஆட்சி செய்யும் அன்சர் அல்லா இயக்கம் தலைமையிலான ஹவுத்தி அரசு வெளியிட்டது.
ஏமன் கடற்பகுதி வழியாக இஸ்ரேலுக்கு எந்த கப்பலும் செல்ல அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ள ஹவுத்தி அரசுப் படைகள் அதனை மீறிச் செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்திப் படைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி, ஏமன் மக்கள் பலரை கொன்றுள்ளது.
இந்நிலையில் புதிய திருப்பமாக, கிரீக் நாட்டுக்கு சொந்தமான MV Tutor என்ற கப்பல் மீது அண்மையில் ஹவுத்திக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த கப்பலை நெருங்கிய சிறிய படகு ஒன்று, திடீரென கப்பல் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. அந்த சிறிய படகு, ஆள் இல்லாமல், இயக்கப்பட்ட படகு என தெரியவந்துள்ளது. இந்த வகை தாக்குதலை முதன்முறையாக ஹவுத்திக்கள் நடத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் டிரோன் ஒன்றின் மூலமாகவும், கடல் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளார். பிற ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரம் அந்த சரக்கு கப்பல், 6 நாட்களுக்கு பிறகு, முழுவதுமாக கடலில் மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் ஹவுத்திக்கள் மூலம் மூழ்கடிக்கப்பட்ட 2வது கப்பல் ஆகும்.
முன்னதாக Rubymar என்ற சரக்கு கப்பலை ஹவுத்திக்கள் தகர்த்து நடுக்கடலில் மூழ்கடித்தனர். முன்னதாக இஸ்ரேல் தொழில் அதிபருக்கு சொந்தமான Galaxy Leader என்ற சரக்கு கப்பலை, ஊழியர்களுடன் சேர்ந்து, ஹவுத்திப்படையினர் சிறைபிடித்தனர். தற்போதும், கப்பல் ஊழியர்கள் ஏமன் சிறைகளில் உள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை லைபீரியா நாட்டு கொடியுடன் சென்ற Transworld Navigator என்ற கப்பல் மீது ஹவுத்திக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதே நேரம் கப்பல் அருகே நெருப்பு பற்றி எரிந்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹவுத்திக்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விமானம் தாங்கிய போர்க்கப்பலான USS Eisenhower என்ற பிரமாண்ட கப்பல், அங்கிருந்து புறப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு கப்பல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படும் வரை தங்களது கடல் நடவடிக்கை தொடரும் என ஹவுத்திக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.