“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – இந்தியாவிடம் மன்றாடும் பாகிஸ்தானியர்கள்!

உயிருக்கே ஆபத்து… இப்போ நாங்க எங்க போவோம்…
குழந்தைகளின் உயிரைக் காக்க போராடும் பாகிஸ்தானியர்கள்…
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானியர் ஒருவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிறவியில் இருந்தே இதய நோய் இருப்பதாகவும், இந்தியாவில் தான் அதற்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என டெல்லி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்து வந்ததாகவும், தற்போது இந்தியாவை விட்டு வெளியேற நெருக்கடி தருவதாகவும் கூறியுள்ள அவர், இன்னும் ஒரே வாரத்தில் தங்களது பிள்ளைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், ஏற்கனவே இதற்காக பல லட்சங்களை செலவிட்ட நிலையில், இப்படி பாதியிலேயே கிளம்பச் சொன்னால் என் குழந்தைகளின் கதி என்னவாகும் என்றும் கதறியுள்ளார்.
ஐதராபாத்தில் தனது மகனின் இதய அறுவை சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர் ஒருவர், தனது மகனுக்கு இன்னும் 2 நாட்களில் அறுவை சிகிச்சை நடக்கவிருந்ததாகவும், இப்போது அது நடக்குமா? நடக்காத என தெரியவில்லை என கண்ணீர் வடித்துள்ளது காண்போர் இதயத்தை ரணமாக்குகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளை வேண்டுமானாலும் எடுக்கட்டும், ஆனால் பிஞ்சு குழந்தைகளின் உயிரை காப்பாற்ற கட்டாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை இந்திய மக்களிடமிருந்து எழுந்து வருகிறது.