பீல்டிங் கோச் ஜாண்டி ரோஸ்? – அருமையான வாய்ப்பை நிராகரித்த பிசிசிஐ!

இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக ஜாண்டி ரோஸை முன்மொழிந்த காம்பீர்…
அருமையான கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த பிசிசிஐ…
ஏமாற்றத்துடன் திரும்பிய கவுதம் காம்பீர்…
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உலக கிரிக்கெட் ரசிகர்களின் இளவரசனாக திகழ்ந்தவர் ஜாண்டி ரோஸ். பந்து எவ்வளவு வேகத்தில் வந்தாலும், எவ்வளவு தொலைவில் வந்தாலும், எந்த திசையில் வந்தாலும், அந்த பந்தின் வேகத்தையே விஞ்சி, பாய்ந்து பிடிப்பதில் கெட்டிக்காரர்.
உலக கிரிக்கெட் வரலாற்றில், பேட்டிங், பவுலிங் ஏன் கீப்பிங்கில் கூட பல வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் பீல்டிங்கில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சாதனை படைத்தவர் தான் தென் ஆப்ரிக்காவின் ஜாண்டி ரோஸ்.
இந்நிலையில், அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்யாகியுள்ளது.
பிசிசிஐக்கு சொந்தமான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டதால், அவர் தனக்கு உதவியாக, பேட்டிங், பவுலிங், பீல்டிங், பயிற்சியாளர்களை நியமிக்க உரிமை பெற்றார். ஆனால் அதனை அணியின் உரிமையாளரான பிசிசிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், பீல்டிங் கோச்சாக அவர் முன்மொழிந்த பெயர் தான் ஜாண்டி ரோஸ். லக்னோ ஐபிஎல் அணியில் இருவரும் விளையாடியுள்ளனர். அந்த நட்பின் காரணமாக காம்பீர் அவரது பெயரை முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்திய வீரர்கள் மட்டுமே, தலைமை மற்றும் உதவி பயிற்சியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராகுல் டிராவிட் குழுவில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த திலிப் தொடர்ந்து நீடிப்பார் என பிசிசிஐ சொன்னதாக கூறப்படுகிறது. இதே போல், பவுலிங் கோச்சாக ஆர். வினய் குமாரை நியமிக்க காம்பீர் விரும்பிய நிலையில், அந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என சொல்லப்படுகிறது.
===