அடங்கிய ஆக்கிரமிப்பு

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விசயத்தில், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின.இந்நிலையில் ஈரானின் எண்ணெய் கிணறுகள், அணு ஆலைகளை தாக்க மாட்டோம், ராணுவ நிலைகளை மட்டுமே தாக்குவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம், ஆக்கிரமிப்பு பிரதமர் நெதன்யாகு உறுதி அளித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.எண்ணெய் கிணறுகளை தாக்கினால், சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயரும் என்றும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது வெறுப்பை ஏற்படுத்துவதுடன், அதிபர் தேர்தலையும் பாதிக்கும் என ஜோ பைடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இஸ்ரேலின் பதிலடி குறித்து கருத்து தெரிவித்த, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, எங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், எந்த ஒரு சிவப்புக் கோட்டையும் தாண்டி, தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, இந்த பிராந்தியத்தில் போர் நீடிப்பதை ஈரான் விரும்பவில்லை. காசா மற்றும் லெபனானில் அமைதி நிலவவே விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். அதே நேரம் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான பதிலடி என்பது மோசமாக இருக்கும், என எச்சரித்துள்ளார்.