உலகம்

இஸ்ரேலுடன் தொடர்பு – கண்டெய்னர் கப்பலை தகர்த்த ஹவுத்திக்கள்!

இஸ்ரேல் உடன் தொடர்புடைய கப்பல் மீது தாக்குதல்…
15 நாள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹவுத்திக்கள் நடவடிக்கை…
ஏவுகணை தாக்கியதில் தீப்பற்றிய சரக்கு கப்பல்…

லைபீரியா நாட்டு கொடியுடன் சென்ற, MV Groton என்ற சரக்கு கப்பல் மீது மிசல்ஸ்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ஏவுகணை கப்பலை தாக்கி, நெருப்பை பற்றவைத்துள்ளது. இதனையடுத்து, அந்த கப்பல் உடனடியாக அருகே உள்ள துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. அதே போல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவோ, கப்பலில் நீர் உட்புகும் சூழலோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில் இருந்து புறப்பட்டு, சவுதியின் ஜெட்டாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் நிறுவனத்தின் பிற கப்பல்கள் இஸ்ரேல் துறைமுகத்திற்கு சென்று வருவதால், இந்த கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்திக்கள் தெரிவித்துள்ளனர்.

காசா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலுக்கு எதிராக போர் பிரகடனத்தை ஏமன் ஹவுத்திப் படைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் சரக்கு கப்பல்கள், இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான கப்பல்கள் மீது செங்கடல், ஏடன் வளைகுடா, பாரசீக வளைகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தாக்குதலை தொடங்கினர்.

இதுவரை சுமார் 70 கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் தொழில் அதிபருக்கு சொந்தமான ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர். 2 கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். செங்கடல் கடற்பாதுகாப்பை கையில் வைத்திருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகளால், ஏமன் படைகளை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏமன் மீது கடந்த ஜுலை 20 ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹோதைதா நகர எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மின் உற்பத்திக் கூடம் பலத்த சேதம் அடைந்தது. இதனிடையே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைமை தளபதி ஃபவுத் சுக்கூர் ஆகியோர் இஸ்ரேல் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் போராளிக்குழுக்கள் தங்களது தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் ஹவுத்திப் படைகள் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றிய செய்தி தற்போது, விரிவாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button