இந்தியா

முதியவரை தாக்கிய சங்கிகள்! உடனடியாக பிணையில் விடுதலை!

முஸ்லீம் முதியவரை, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, மதவெறி கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கைதான அந்த கும்பல் ஒரே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாலிஸ்காவூன் என்ற ஊரைச் சேர்ந்த, ஹாஜி அஷ்ரப் அலி என்ற 72 வயது முதியவர், மும்பை கல்யானில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ரயிலில் சென்றுள்ளார். ரிசர்வ் செய்யப்படாத பொது பெட்டியில், பயணித்த அவரிடம் முன்னதாக இருக்கை தொடர்பாக ஒரு கும்பல் தகராறு செய்துள்ளது. பிறகு, அந்த முதியவர், எருமை மாட்டின் இறைச்சியை பாட்டில்களில் அடைத்து எடுத்துச் சென்றதை அறிந்து கொண்ட, அங்கிருந்த கும்பல், அது என்ன இறைச்சி என்று கேட்டு தாக்கத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 5க்கும் மேற்பட்டோர் காட்டு கூச்சல் எழுப்பியவாறு, கை, கால், முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் முதியவரை தாக்கியுள்ளனர். எங்களுக்கு இப்போது சர்வான் விரதம் அப்படி இருக்கும் போது, நீ எப்படி மாட்டிறைச்சி எடுத்துச் செல்லலாம்… பஜ்ரங்தளத்தை கூப்பிடுங்கள் இவனை கொல்லட்டும்… ரயிலில் இருந்து தூக்கி வீசிவிடுவோம் என தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் மேலும் முதியவரின் மொபைல் போனை பறித்துக் கொண்டதோடு, 2800 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.இதனிடையே காயம் அடைந்த முதியவர், கல்யானில் இறங்கி, தனது மகள் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் அந்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளவில்லை.இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த எஸ்டிபிஐ, கட்சியினரை தொடர்பு கொண்ட குடும்பத்தினர் நடந்த விசயங்களை கூறியுள்ளனர். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தை லின்சிங் அதாவது கும்பல் படுகொலைக்கான முயற்சியாக கருதிய காவல்துறை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், உடனடியாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் 3 பேரை கைது செய்துள்ளனர்.அதே நேரம் ஒரு பிரிவை தவிர்த்து, ஜாமீனில் வெளியே வரக்கூடிய எளிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நீதிமன்றம் 3 குற்றவாளிகளையும் அன்றே விடுதலை செய்துள்ளது.
இதனிடையே குற்றவாளிகளின் ஒருவன் பெயர் ஆசு அவ்காத் என்றும், இவனது தந்தை ஒரு காவல்துறை அதிகாரி என்றும், இவன் காவல்துறை தேர்வுக்காகவே மும்பைக்கு ரயிலில் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button