டிடிஎஃப் வாசனை கைது செய்ய ஆந்திர போலீசார் திட்டம்!

மத உணர்வுகளை புண்படுத்திய புகாரில், பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனை ஆந்திர போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பிராங்க் எனப்படும் கேலி வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர். இது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக ஒரு தரப்பு நெட்டிசன்கள் புகார் எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பது கேவலமான செயல் என கண்டித்துள்ளது.
அத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து திருப்பதி காவல்துறை மேல்நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல செயல்பாடுகள் மூலம் பல வழக்குகளை சந்தித்தவர் டிடிஎஃப் வாசன். சிறை தண்டனையையும் அனுபவித்தவர். தற்போது, சாமி கும்பிட சென்ற இடத்தில் விளையாட்டாக அவர் செய்த காரியம் வினையாக மாறியுள்ளது. அதே நேரம் அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதாக அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.