பிரபல கோவில்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை… திருமணத்தை முன்னிட்டு ஆனந்த் அம்பானி தாராளம்…

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கடந்த மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா ஒன்று, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது.
இந்த திருமணத்துக்காக ஜாம் நகர் விமான நிலையம், பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.
பொதுவாக சிறிய விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படாத நிலையில், அம்பானிக்காக இந்திய அரசு அந்த விதியை தளர்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த விமானப்படை ராணுவ வீரர்களும் பங்கேற்றதில் இருந்தே அம்பானிக்கு இந்திய அரசு கொடுத்துள்ள முக்கியத்துவம் அனைவர்க்கும் புரிந்தது. .
இந்த திருமணத்துக்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் அளவு செலவு செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் கூறியிருந்தன.
இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான கோவில்களுக்கு 5 கோடி ரூபாய்களுக்கு மேல் நன்கொடை அளித்து மீண்டும் ஊடகங்களில் தனது பெயரை வரவைத்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்கும், அசாமில் உள்ள மா காமாக்யா கோயிலுக்கும் 2 கோடியே 51 லட்சம் அளவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அசாமில் உள்ள மா காமாக்யா கோயில் அம்பானியின் குடும்பத்துக்கு நெருக்கமாக கோவிலாக திகழ்கிறது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அம்பானி குடும்பம் குஜராத்தின் ஜாம்நகரில் 14 புதிய கோயில்களைக் கட்டுவதற்கு உதவி செய்துள்ளது. அதுமட்டுமின்றி கோவில்களுக்கு நன்கொடைகள் அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
==========