அஜய் ஜடேஜா! ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

90களில் இந்திய கிரிக்கெட்டில் பல அதிரடிகளை காட்டி, ரசிகர்களை கவர்ந்த முக்கிய வீரர் அஜய் ஜடேஜா. இவர் ஜாம்நகர் ராஜ குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடந்த தசரா நிகழ்ச்சியில் ஜாம் நகரின் மகாராஜாவாக இருக்கக் கூடிய சத்ருசல்யா சிங் தனது அடுத்த வாரிசாக அஜய் ஜடேஜாவை அறிவித்துள்ளார்.
இதனால் ஒரே நாளில் அஜய் ஜடேஜா 1450 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி ஆகி உள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் அதிக பணம் வைத்திருக்கும் விராட் கோலியை, அஜய் ஜடேஜா முந்தி உள்ளார்.
விராட் கோலியின் சொத்து மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இருக்கும் மகாராஜாவிற்கு, குழந்தைகள் இல்லாததால் தனது நெருங்கிய உறவினராக இருக்கக்கூடிய அஜய் ஜடேஜாவை அடுத்த வாரிசாக அறிவித்துள்ளார்.
அஜய் ஜடேஜா இந்திய அணிக்காக 1992-இல் இருந்து 2000ஆம் ஆண்டு வரை 15 டெஸ்ட் போட்டிகளிலும், 196 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இவரது தந்தை தௌலத் சின்ஜி ஜடேஜா காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு ஜாம்நகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களது குடும்பத்திற்கு உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஜாம்நகர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங்ஜி 1896 இல் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் நினைவாகவே இந்தியாவில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதே ரஞ்சித்சிங்ஜி 1907ல் ஜாம்நகரின் மகாராஜாவாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 1905ல் பிறந்த இதே ராஜ குடும்பத்தைச் சேர்ந்த துலீப் சின்ஜி இங்கிலாந்து தேசிய அணிக்காகவே விளையாடியுள்ளார்.இவரது நினைவாக துலீப் கோப்பை என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் இந்திய அளவில் நடைபெற்று வருகிறது.ரஞ்சித்சிங்ஜி கிரிக்கெட்டில் புகழ்பெற்று பின் நாட்களில் மகாராஜாவாக மாறியது போல், அஜய் ஜடேஜாவும் கிரிக்கெட்டில் புகழ்பெற்று தற்பொழுது ஜாம்நகர் மகாராஜாவாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.