ஐ.டி. நிறுவனத்தில் நாய்க்கு ஆபீசர் வேலை…!

ஐதராபாத்தைச் சேர்ந்த ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை தனது அலுவலகத்தில் வேலை போட்டுக் கொடுத்துள்ளது. டென்வரை Chief Happy Officer ஆக நியமித்துள்ள, ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் அரேபாகா சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்.
இது என்னடா நாய்க்கு திடீரென வந்த வாழ்க்கை என நீங்கள் நினைக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் டென்வர் வந்த பிறகு அந்த கம்பெனிக்கு தான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை வடிவமைக்கிறது. கடும் போட்டிக்கு இடையே புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய வேலை என்பதால், இந்நிறுவன ஊழியர்கள் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
டென்வரை அலுவலகத்திற்குள் பணியமர்த்தியதில் இருந்தே ஊழியர்களின் மன அழுத்தம் காணாமல் போயுள்ளது. ஆபீஸின் செல்லப்பிராணியான டென்வருடன் விளையாடி பொழுது போக்குவதால் இந்த மேஜிக் நிகழ்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஊழியர்களிடையே மன உறுதி மற்றும் டீம் பாண்டிங் அதிகரித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் கூகிள் போன்ற தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்கள் நீண்ட காலமாக செல்லப்பிராணிகளை வேலையில் அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.