இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைப் பெற்ற பூனை!

இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட மாடல் அழகிகள், கிரிக்கெட் வீரர்கள், ஹீரோ, ஹீரோயின்கள் ஏன் இன்ஃபுளூயன்சர்கள் பற்றி எல்லாம் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பூனையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
நாலா என்ற ஒரு பூனை, இன்ஸ்டாகிராமில் அதிகப் ஃபாலோயர்களைக் கொண்ட பூனை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. நாலா ஒரு சியாமிஸ்-டேபி கலவையைச் சேர்ந்த பூனை. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்டைக் அனிமல் ஷெல்டரில் இருந்து 4 மாத குட்டியாக நாலாவை வாரிசிரி மெத்தா சிட்டிபான் என்பவர் தத்தெடுத்தார். அதன் பின்னர் நாலாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர ஆரம்பித்தார். நாலாவின் அகன்ற நீல நிற கண்கள் சோசியல் மீடியாவில் கிடுகிடுவென பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்தது.
அதன் விளைவாக தற்போது 2 வயதாகும் நாலாவை 4.5 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடருகிறார்கள். தற்போது நாலா இன்ஸ்டாகிராமின் பவர்ஃபுல் இன்ஃபுளூயன்ஸராகவும் வலம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் ‘லவ் நாலா’ என்ற பெயரில் பூனை உணவு பிராண்ட் மூலமாகவும் ஒரு வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளது. அதுமட்டுமின்றி பிஸ்ஸல்,ஃபிரிஸ்கீஸ், பாவ் சிபிடி, ஹுலு, லிட்டர் ரோபோ ஆகிய பிராண்ட்களும் நாலாவை ஸ்பான்சர் செய்கின்றன. இந்நிறுவனங்களின் ஒரு போஸ்ட்டை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட நாலாவிற்கு 8,683 டாலர்கள் வழங்கப்படுகிறதாம்.
பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி தனது சோசியல் மீடியா பாப்புலாரிட்டியை வைத்து விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் இந்த செல்லக்குட்டி பூனை செய்து வருகிறது.