பாஜக பரப்புரையில் டோலி சாய்வாலா… கூட்டத்தை திரட்ட பாஜக புது யுக்தி!

முன்பெல்லாம் சினிமா, விளையாட்டு, தொழிலில் சாதனை படைத்தவர்களே செலிபிரிட்டிகளாக வலம் வருவார்கள். ஆனால் இப்போதோ சமூகவலைதளங்களில் ரீல்ஸ் அல்லது வீடியோ போட்டே சாமானியர்கள்கூட பிரபலமாகி விடுகின்றனர். அப்படி தள்ளுவண்டியில் டீக்கடை வைத்திருந்த நாக்பூரைச் சேர்ந்த டோலி சாய்வாலா, தனது பிரயேகமான டீ தயாரிக்கும் வீடியோக்கள் மூலமாக சோசியல் மீடியா பிரபலமாக வலம் வருகிறார்.
அதுவும் கடந்த மார்ச் மாதம் இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸுக்கு டீ போட்டுக் கொடுத்ததன் மூலமாக உலக பிரபலம் ஆகிவிட்டார். பாலிவுட் ஹீரோக்களைப் போன்ற காஸ்டியூமில், கலர் ஃபுல் தலைமுடியுடன், வித்தியாசமான ஸ்டைலில் இவர் டீ போடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அப்படிப்பட்ட வீடியோக்களால் கவனம் ஈர்த்து வந்த டோலி சாய்வாலாவை பாஜக தனது பரப்புரையில் பங்கேற்க வைத்துள்ளது.
தேர்தல் பிரசாரம் என்றாலே பாஜக பொதுக்கூட்டங்களில் காலியாக இருக்கும் நாற்காலிகள் குறித்த வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகும். சமீப காலமாக அதை தவிர்ப்பதற்காக பிரபலங்களை தங்களது பிரச்சாரங்களில் பாஜக பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக சினிமா துறையில் கொடிக்கட்டி பறக்கும் நட்சத்திரங்கள் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் ஹிட் படம் கொடுத்த ஹீரோ, ஹீரோயின்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார்கள்.
இந்த முறை மகாராஷ்டிராவில் நடக்கும் பரப்புரையில் டீ போடும் வீடியோக்கள் மூலம் பிரபலமான இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி டோலி சாய்வாலாவை பயன்படுத்தியுள்ளனர். கூட்டத்தை அதிகரிப்பதற்காக பாஜக செய்துள்ள இந்த பப்ளிசிட்டி ஸ்டேண்ட் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது. நமது கொள்கை மீதும், கட்சி தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்ததால் பாஜக இதுபோன்ற நபர்களை மக்களை கவர பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.