விராட் கோலிக்கு இப்படியொரு நிலையா?… 10 ஆண்டுகளில் முதல் முறையாக கடும் சறுக்கல்!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி கடும் சரிவைச் சந்தித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3க்கு – 0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தியா தனது சொந்த மண்ணில் இப்படி ஒயிட் வாஷ் செய்யப்பட்டதற்கு சீனியர் கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் மோசமான ஆட்டமே முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.
ஏனெனில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி வெறும் ஒரேயொரு அரைசதம் உட்பட 93 ரன்களை மட்டுமே எடுத்தார். இது விராட் கோலி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியா? என்ற கேள்வியை எழ வைத்துள்ளது. மற்றொருபுறம் அவரது ரசிகர்களே “நீ அமெரிக்காவிற்கே போயிடு சிவாஜி” என்பது போல்… “டி 20 மாதிரி டெஸ்ட் கிரிக்கெட் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுங்கள்” என பேச ஆரம்பித்துவிட்டனர்.
ஏற்கனவே சோகத்தில் இருக்கும் விராட் கோலி ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தும் விதமாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வேறு வெளியாகியுள்ளது. ஆம், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 20 இடங்களுக்கு கீழ் விராட் கோலி தள்ளப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பதோடு, அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. விராட் கோலியின் இந்த சரிவு,வர உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அக்னீ பரீட்சையாக மாற்றியுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலிய மண்ணிலும் விராட் கோலி சொதப்பினால், அவர் அணியை விட்டு நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.