கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலை வைத்து ஆவணப் படம் தயாரித்த ஹவுத்திக்கள்!

ஹவுத்திக்களால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் சரக்கு கப்பல் கேலக்ஸி லீடர்…
கப்பல் கேப்டன் உள்ளிட்டோரை வைத்து, ஆவணப்படம் தயாரித்த ஹவுத்திக்கள்…
ஏமன் ஹவுத்திப் படைகள் ஊடகம் மூலம் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் அவர்கள் கைப்பற்றிய இஸ்ரேல் தொழில் அதிபருக்கு சொந்தமான Galaxy Leader கப்பல் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
அந்த ஆவணப்படத்தில், அந்த கப்பல் கைப்பற்றப்பட்டது எப்படி? அதற்கு முன்பு, எவ்வாறு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன? தங்களது தாக்குதலில் இருந்து தப்ப வழக்கமாக இஸ்ரேல் சரக்கு கப்பல்கள் மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற பல விசயங்களை விளக்கியுள்ளனர்.
அந்த ஆவணப்படத்திற்கு “We Will Catch Them” எனப் பெயரிட்டுள்ளனர். அந்த ஆவணப்படத்தில், ஹவுத்திப் படைகள் தாக்க வரும் போது, அதில் இருந்த ஊழியர்கள், சாப்பிட்டுக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்துள்ளனர். அதனை அவர்கள் அப்படியே நடித்துக் காட்டி, படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல் கப்பலின் கேப்டன் அங்கு சம்பவம் நடந்த அன்று, நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பேட்டியாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய, ஹவுத்தி கமாண்டர், அதுபற்றி விளக்கம் அளிக்கும் பகுதியும் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக அந்த கப்பலை சுற்றுலாத் தலமாக மாற்றி வைத்திருந்த, ஹவுத்திப்படை, தற்போது, அந்தக் கப்பலை வைத்து, ஆவணப்படம் தயாரித்து, அதனை அந்நாட்டு அரசு சேனலில் ஒளிபரப்பு செய்து, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளனர்.
===