சவுதியில் 5 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் – மக்கா நகரம் 2வது இடம்!

சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் உடலுறுப்பு தானம்
5 லட்சம் பேர் பதிவு… ரியாத்தை தொடர்ந்து, 2வது இடத்தில் மக்கா…
உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை சுமார் 5,33,000 பேர் உடலுறுப்பு தானத்திற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ரியாத் நகரத்தில் 1,42,000 பேரும், மக்காவில் 1,15,000 பேரும் பதிவு செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 65,000 பேர் பதிவு செய்துள்ளனர். குறைந்த அளவாக நஜ்ரானில் 1500 பேர் மட்டுமே உடலுறுப்பு தானத்திற்கு முன்வந்துள்ளனர்.
சவுதியில் கடந்த ஆண்டு 2091 பேருக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடலுறுப்பு தானம் பற்றிய அறிவியல் வளர்ந்த போது, இஸ்லாமிய மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளதா போன்ற கேள்விகள், விவாதங்கள் எழுந்தன.
இந்த சூழலில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், உடலுறுப்பு தானத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி உண்டு என அறிவித்தனர்.
ஒரு மனிதரை வாழ வைத்தவர், உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போல் ஆவார் என்ற திருக்குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி, உடலுறுப்பு தானத்திற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
=====