4 அரபு நாடுகளை கண்காணிக்க மலை உச்சியில் செயல்படும் இஸ்ரேல் உளவு மையம்! குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லா!

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை கண்காணிப்பதற்காக மலை உச்சியில் இஸ்ரேல் அமைத்துள்ள உளவுத்துறை மையம்…
முதன்முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் தாக்கிய ஹிஸ்புல்லா…
சிரியா, ஈராக், லெபனான், சவுதி அரேபியா ஆகிய 4 நாடுகளை கண்காணிப்பதற்காக, இஸ்ரேல் மவுண்ட் ஹெர்மான் மலைப்பகுதியில் உளவுத்துறை மையத்தை அமைத்துள்ளது. அங்கிருந்து, தொலைத்தொடர்பு போர் கருவிகள் மூலம் 4 நாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் முதன் முறையாக அந்த இஸ்ரேலின் உளவுத்துறை மையத்தை குறிவைத்து, ஹிஸ்புல்லா ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தி ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மலை சுமார் 2800 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அதே நேரம் இஸ்ரேலின் வடக்குப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக, சுமார் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமான ஏபிசி தெரிவித்துள்ளது. சுமார் 70 ஆயிரம் பேர் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தொடர்ந்து தீ எரிவதால், அந்த நிலங்களை மீண்டும் விளைச்சலுக்கு பயன்படுத்த, அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் வடக்குப் பகுதி, லெபனானிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும். இதனால் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு லெபனானில் ஆதரவு நீடிக்கிறது.
====