தொழிலில் கோட்டை விடும் எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் இருந்து ‘தி கார்டியன்’ விலகல்!

2022ம் ஆண்டு ஜாக் டார்ஸிடமிருந்து ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் அடுக்கடுக்கான சர்ச்சைகளையும், சரிவுகளையும் சந்தித்து வருகிறார். ஃபேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக பிரபலமான சோசியல் மீடியாவாக இருந்ததால் ட்விட்டரை மில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டிக்கொடுத்து எலான் மஸ்க் வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகளுடன் குழாய் அடி சண்டை போடுவது போல் ட்விட்டரில் சண்டையிட்டது, ட்விட்டர் ஃபுளூ டிக்கிற்கு மாதாந்திர கட்டணம் அறிவித்தது, ட்விட்டர் என்பதை எக்ஸ் என பெயர் மாற்றியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ட்விட்டர் முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறினர். இதனால் எக்ஸ் தளமாக மாறிய ட்விட்டர் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனை வாங்கியதால் இடையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கூட கணிசமான அளவு குறைந்தது.
அதுமட்டுமின்றி எலான் மஸ்க் கைக்கு போனதில் இருந்தே ட்விட்டர் எதிர்மறை கருத்துக்களை பரப்பும் இடமாகிப்போனது. அதற்கும் பிள்ளையார் சுழி போட்டதும் நம்ப எலான் மஸ்க் தான். தன்னுடைய சொந்த சோசியல் மீடியா என்ற மமதையில், தனக்கு வேண்டாவர்களைப் பற்றி சகட்டுமேனிக்கு விமர்சித்து பதிவிட்டு வந்தார். இது அமெரிக்க அதிபர் தேர்தலின் போது புதிய உச்சம் தொட்டது.
கருப்பின பெண்கள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், பெண்கள் ஆகியோர் மீது வெறுப்பைக் கக்கும் கருத்துக்களை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பரப்பினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் பிரசாரமும் மிக முக்கியம் காரணம் எனக்கூறப்படுகிறது. அதற்கு கைமாறாக நேற்று எலான் மஸ்கிற்கு அமெரிக்க நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பைக் கொடுத்து டிரம்ப் அழகு பார்த்திருக்கிறார்.
இந்த சூழலில் 200 ஆண்டுகள் பழமையான லண்டனின் பாரம்பரியமிக்க ‘தி கார்டியன்’ நாளிதழ் இனிவரும் காலங்களில் எக்ஸ் தளத்தில் எந்தவொரு பதிவும் பகிரப்படாது என அறிவித்துள்ளது. மேலும் தங்கள் செய்தியாளர்களின் பயன்பாட்டுக்காக தங்களின் கணக்கு மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் இந்த நாளிதழின் 30க்கும் மேற்பட்ட கணக்குகளை 2 கோடிக்கும் மேலானோர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பிற்கு எதிராக இந்த நாளிதழ் கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. எலான் மஸ்கின் பாலினம் மற்றும் நிறவெறி தொடர்பான பதிவுகள் இந்த விலகலுக்கு முக்கிய காரணம் என்றாலும், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தை டிரம்பிற்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதையும் தி கார்டியன் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.